"சிறுபான்மை இனத்தவர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் அரசு செயல்படக் கூடாது. மத அடிப்படையில் எவருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது. இத்தகைய ஒதுக்கீடு முறையை நீதிமன்றங்களும் ஆதரிக்கவில்லை. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதை அரசு கைவிட வேண்டும்.
ஹிந்துத்துவா கொள்கையை பா.ஜ.க ஒருபோதும் கைவிடவில்லை. சிறுபான்மையினர் என்ற கருத்தை மாற்றியமைக்க அரசு முன்வரவேண்டும். தேசிய வளங்களைப் பெறுவதில் சிறுபான்மையினருக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளது கண்டனத்துக்குரியது" என்றார் ராஜ்நாத் சிங்.
காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் யார்?
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், எல்.கே.அத்வானிதான் பிரதமர் பதவி வகிப்பார் என்ற அறிவிப்பை பா.ஜ.க. தேசியக் கவுன்சில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சி இவ்வாறு அடுத்த பிரதமர் பெயரை பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா என்று சவால் விடுத்தார்.
"எனது சவாலுக்கு பதில் அளிக்க காங்கிரஸ் கட்சியால் இயலாது என்பது நிச்சயம். அடுத்த பிரதமர் பதவிக்கு ஆள் கிடைக்காத இக்கட்டான நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது" என்றார் அவர்.
மேலும், கூட்டணி ஆட்சியை விட பெரும்பான்மை பலத்துடன் ஒரு கட்சி ஆட்சியே தேவை என வலியுறுத்தும் காங்கிரஸ் கட்சி, அரசின் அதிகார மையம் அனைத்தையும் கொண்ட ஒரே தலைமையை அறிவிக்க முடியாமல் தவிப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.