கென்யாவில் நடந்து வரும் இனக் கலவரம் அந்நாட்டின் மேற்கு பகுதிக்கும் பரவியது. நேற்று நைரோபி அருகில் உள்ள சிற்றூர் ஒன்றில் 11 குழந்தைகள் உட்பட 19 பேர் ஒரே வீட்டிற்குள் அடைத்து உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.
கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் முவாய் கிபாகி வெற்றி பெற்றார். அவர் முறைகேடாக வெற்றி பெற்றுள்ளதால் தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க் கட்சியான ஆரஞ்சு ஜனநாயக இயக்கத்தின் தலைவர் ரெய்லா ஒடிங்கா வலியுறுத்தி வருகிறார்.
இதைத் தொடர்ந்து அங்கு வெடித்த கலவரம் இனக் கலவரமாக மாறியது. இதையடுத்து இதுவரை ஏறத்தாழ 900 பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும், 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிருக்கு பயந்து வீடுகளை விட்டு வெளியேறி விட்டதாகவும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.
இதற்கிடையில், ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் கடந்த 7 நாட்களாக கென்யாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர் ரெய்லா ஒடிங்காவை சந்தித்துப் பேசினார்.
இந்த பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிபர் முவாய் கிபாகியுடன் பேச்சு நடத்த தங்கள் கட்சி ஆயத்தமாகி வருவதாகவும் ஒடிங்காவின் ஆரஞ்சு ஜனநாயக இயக்கத்தைச் சேர்ந்த முசாலியா முடாவாடி கூறினார்.
அதிபருடன் நடக்கும் பேச்சின் போது இருதரப்பிலும் தலா 3 பேர் இடம் பெறுவார்கள் என்றும், பேச்சுக்கு உதவ கூடுதலாக ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
கலவரக் கும்பலால் கடந்த 3 நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.