மேற்கு வங்காளத்தில் கோழி காய்ச்சலை தடுக்க எத்தனையோ முயற்சி எடுத்த போதிலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பரவி வருகிறது. 8 மாவட்டங்களில் பரவி இருந்த இந்த நோய் இப்போது மேலும் 3 மாவட்டங்களுக்கு பரவி உள்ளது. மொத்தம் உள்ள 19 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் கோழி காய்ச்சல் தாக்கியுள்ளது.
மாநில தலைநகரம் கொல்கட்டா புறநகர் பகுதிகளிலும் இப்போது கோழி காய்ச்சல் பரவியுள்ளது. நோய் தாக்கப்பட்ட இடங்களில் ஒட்டு மொத்தமாக கோழிகளை அழிக்கும் பணி நடந்து வருகிறது. 20 லட்சம் கோழிகளை அழிப்பது என்று திட்டமிட்டு இந்த பணிகள் நடந்து வந்தன. ஆனால் நோய் மேலும் பரவி வருவதால் இதன் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் கோழி பண்ணைகளில் வாரத்துக்கு 60 லட்சம் கோழிகள் புதிதாக உற்பத்தி செய்யப்பட்டன. நோய் பரவுவதால் கோழி உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. கோழி விற்பனை விலையும் 75 விழுக்காடு வீழ்ச்சி அடைந்து விட்டது. இத்துடன் நோய் தாக்கிய கோழிகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் கோழி பண்ணையாளர்களுக்கு தினமும் ரூ.10 கோடி இழப்பு ஏற்படுவதாக மாநில கோழிப்பண்ணை சங்க தலைவர் பரசுன்ராய் தெரிவித்தார்.