பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். இதனால் வழக்காமான வங்கி பணிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. நாடு முழுவதும் 50 ஆயிரம் வங்கி கிளைகளில் பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஐக்கிய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் வி.கே.குப்தா தெரிவித்தார்.
அகில இந்திய அளவிலான 9 வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள், ஐக்கிய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பில் இணைந்துள்ளன. இந்த அமைப்பு பாரத ஸ்டேட் வங்கியுடன், அதன் துணை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஓய்வு கால பணத்திற்கு பதிலாக (பென்ஷன்) பிராவிடண்ட் பண்ட், சம்பள உயர்வு பற்றி விரைவில் உடன்பாடு செய்து கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் டெல்லியில் மத்திய அரசு, இந்திய வங்கிகள் சங்கம், ஐக்கிய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவைகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படாததினால், முன்னரே அறிவித்தபடி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர்.