அத்வானி தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்திக்க தே.ஜ.கூட்டணி முடிவு!
செவ்வாய், 22 ஜனவரி 2008 (19:59 IST)
நமது நாட்டில் அடுத்துவரும் மக்களைத் தேர்தலை பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானி தலைமையில் சந்திப்பதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.கூ.) முடிவு செய்துள்ளது.
அதேநேரத்தில், தே.ஜ.கூ.வின் தலைவராக நீடிக்க உள்ள முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் ஆலோசனைகளின் பேரில்தான் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
புது டெல்லியில் இன்று எல்.கே.அத்வானியின் வீட்டில் நடந்த தே.ஜ.கூ.வின் முக்கியக் கூட்டத்தில், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தே.ஜ.கூ.வின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் முன்மொழிந்த இத்தீர்மானத்தில், "ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஏழைகளுக்கு எதிரான, விவசாயிகளுக்கு எதிரான, ஊழல் மலிந்த, செயலிழந்த, உள்ளுக்குள் சமச்சீரற்ற ஆட்சியிலிருந்து மக்களைக் காப்பாற்றும் கடமை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தவிர தே.ஜ.கூ.வின் மற்ற எல்லா உறுப்பினர்களும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், மக்களவை மாநிலங்களவையில் உள்ள தே.ஜ.கூ.வின் தலைவர்களும் பங்கேற்றதாக பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
இதனால், எல்.கே.அத்வானியை தனது தலைவராக தே.ஜ.கூ. ஏற்றுக் கொள்ளுமா என்ற குழப்பத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் களப்பணிகளில் இருந்து தொடர்ந்து விலகியிருந்தாலும், முக்கிய முடிவுகளுக்கு ஆலோசனை வழங்குவார்.