தேர்தலைத் தள்ளிப் போடக் கூடாது : எல்.கே.அத்வானி
செவ்வாய், 22 ஜனவரி 2008 (19:58 IST)
எந்தக் காரணத்தை முன்னிட்டும் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களைத் தள்ளிப் போடக் கூடாது என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வலியுறுத்தி உள்ளார்.
புது டெல்லியில் இன்று நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்திற்குப் பிறகு அத்வானி விடுத்துள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளின் மறு வரையறை முடிந்துள்ளதைக் காரணம் காட்டித் தேர்தல்களைத் தள்ளிப் போட மத்திய அரசு முயற்சிக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.
மேலும், "அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் மாற்றி அமைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் நடக்குமா அல்லது பழைய தொகுதிகளின் அடிப்படையில் நடக்குமா என்ற ஐயப்பட்டிற்கு இன்னும் மத்திய அரசு விளக்கம் தர வில்லை.
இந்நிலையில், நடந்து முடிந்துள்ள தேர்தல்களில் கிடைத்துள்ள படுதோல்விகளை அடுத்துத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள காங்கிரசுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால், தொகுதி மறுசீரமைப்பை காரணம் காட்டி தேர்தல்களைத் தள்ளிப் போடுவதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முயற்சிக்கக் கூடும் என்று நாங்கள் கருதுகிறோம்.
இனி நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதைத் தடுக்கும் வகையில் தேர்தல்களைத் தள்ளிப் போட காங்கிரஸ் முயற்சிக்கக் கூடாது. கர்நாடகம் உள்ளிட்ட அறிவிக்கப்பட்ட எல்லா மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல்களையும் அட்டவணைப்படி நடத்தி முடிக்க வேண்டும்." என்றும் அத்வானி கூறியுள்ளார்.