வட இந்தியாவை வாட்டும் கடுங்குளிர்!
செவ்வாய், 22 ஜனவரி 2008 (12:11 IST)
வட இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பநிலை குறைந்து, கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று சராசரி வெப்பநிலை 2.6 டிகிரியாகப் பதிவானது. இது வழக்கத்தைவிட 5 டிகிரி குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் இரண்டு நாட்களுக்கு சராசரி வெப்பநிலை 3 டிகிரியாக நீடிக்கும் என்றும், பனிப்பொழிவு தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை பூஜ்யத்தை விடக் குறைவாகப் பதிவானது.
பஞ்சாப்பில் குறைந்தபட்சமாக மைனஸ் 2 டிகிரியும், அதிகபட்சமாக 4 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஹரியானாவில் குறைந்தபட்சமாக 1 டிகிரியும், அதிகபட்சமாக 5 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.
ராஜஸ்தான், சுரு பகுதியில் குறைந்தபட்சமாக மைனஸ் 2 டிகிரி வெப்பநிலை பதிவானது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் அதிகபட்சமாக 5 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சிம்லாவில் வெப்பநிலை கடந்த 2 நாட்களாக மைனஸ் 2.2 டிகிரியாக நீடிக்கிறது. இங்குள்ள ஏரிகள் ஒருவாரமாக உறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு- காஷ்மீர், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பனிப்பொழிவு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.