பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை 6 வாரத்துக்கு தள்ளிவைப்பு : உச்ச நீதிமன்றம்!
சனி, 19 ஜனவரி 2008 (17:33 IST)
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாற்றப்பட்டுள்ள அத்வானி மூத்த பா.ஜ.க. தலைவர்கள், சங் பரிவார் அமைப்பின் தலைவர்கள் மீதான வழக்கு விசாரணையை இரண்டாக பிரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆறு வார காலத்திற்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், பாபர் மசூதியை பாதுகாப்பதாக உறுதி கொடுத்து, அதனைக் காக்கத் தவறியதோடு, கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 -ந் தேதி அதனை இடிக்க காரணமாக இருந்தவர்களென குற்றஞ் சாற்றப்பட்டுள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் எம்.எம்.ஜோஷி, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி, வி.ஹெச்.பி. தலைவர்கள் அசோக் சிங்கால், விஷ்ணு ஹரி டால்மியா, ஆச்சார்ய கிரி ராஜ் கிஷோர், சாத்வி ரிதம்ஃபரா உள்ளிட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்போதைய உத்திர பிரதேச முதல்வராக இருந்த கல்யாண்சிங்-க்கு ஒரு நாள் அடையாள சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய மிக மிக முக்கியமான தலைவர்கள் மீதான விசாரணையை லக்னோவில் இருந்து லக்கீம்பூர் கேரிக்கும், மற்றவர்கள் மீதான விசாரணை லக்னோவிலேயே நடைப்பெறும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்,நீதிபதிகள் ஜி.பி.மாத்தூர், ஆர்.வி.இரவீந்திரன் ஆகியோர் முன்பு வந்தது. குற்றஞ் சாற்றப்பட்டவர்கள் மீதான விசாரணை நடைப்பெற்று வருவதால், இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஆறு வார காலத்திற்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.