சிமெண்ட் மீதான வரியை குறைக்க வேண்டும் : சிமெண்ட் ஆலைகள்!

வெள்ளி, 18 ஜனவரி 2008 (15:24 IST)
சிமெண்ட் மீது விதிக்கப்படும் பல்வேறு லெவி மற்றும் வரிகளை குறைக்க வேண்டும் என்று சிமெண்ட் ஆலைகள் மத்திய நிதி அமைச்சரிடம் கோரியுள்ளனர்!

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்ய உள்ள நிதி நிலை அறிக்கை குறித்து பல்வேறு தரப்பினருடன் கலந்து ஆலோசித்து வருகிறார்.

சிமெண்ட் ஆலைகள் அவரிடம் நிதி நிலை குறித்து சமர்ப்பித்துள்ள மனுவில், வீடுகள் கட்டுவதற்கும், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த கட்டுப்படியான விலையில் சிமெண்ட் கிடைக்க வசதியாக, இதன் மீது விதிக்கப்படும் லெவி, வரிகளை குறைக்க வேண்டும்.

சர்வதேச அளவில் இந்தியாவில் தான் சிமெண்ட் மீது அதிக அளவு வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆலை விலையில் 60 விழுக்காட்டிற்கும் மேல் வரி விதிக்கப்படுகிறது. மற்ற ஆசிய பசிபிக் நாடுகளில் 17 விழுக்காடு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.

நமது அண்டை நாடான இலங்கையில் 11.4 விழுக்காடு முதல் அதிகபட்சமாக 20 விழுக்காடு வரை வரி விதிக்கப்படுகிறது.

சிமெண்ட் விற்பனை விலையின் மீது உற்பத்தி வரி விதிக்க வேண்டும். இதனால் எல்லா வித சிமெண்ட் விலையும் ஒரே சீராக இருக்கும் என்று நிதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ள கோரிக்கை மனுவில் சிமெண்ட் ஆலை சங்கம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்