விதிமுறை மீறல்: அர்ஜூன்சிங், அம்பிகா சோனி வீடுகளை இடிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!
வியாழன், 17 ஜனவரி 2008 (17:56 IST)
டெல்லியில் லுதியென் பகுதியில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் சிங், அம்பிகா சோனி ஆகியோர் வீடுகள் உள்ளிட்ட 51 வீடுகளை இடித்துத் தள்ள டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள பங்களாக்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசிடம், டெல்லி உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. கடந்த 2006 ஆம் ஆண்டு திருத்திய கட்டமைப்பு விதிகளை மீறி 71 பங்களாக்கள் கட்டப்பட்டு உள்ளதாக மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விளக்கத்தில் கூறியிருந்தது.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எம்.கே. சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. லுதியென் மண்டலத்தில் விதிமுறையை மீறி கட்டப்பட்டுள்ள 51 பங்களாக்களையும் இடித்து தள்ள பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும்,விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள பகுதிகளை இடிப்பதால் அங்கு குடியிருப்பவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் என்றும், அந்த வீடுகளில் தங்கியிருப்பவர்கள் முக்கியமானவர்கள் என்பதற்காகவும் வீடுகளை இடிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற அரசு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்த நீதிபதி, அந்த வீடுகளை இடித்து தள்ள உத்தரவிட்டார்.
கூடுதல் இடம் தேவை என்பதற்காக விதிகளை மீறி கட்டப்பட்டது என்று அனைவருமே சொல்லத் தொடங்கினால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். விதிகளை மீறியவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக எல்லாம் காரணம் சொல்லக் கூடாது. அரசு தன் கடமையைச் செய்ய வேண்டும்.
அனைவருக்கும் பொருந்தும் படியான சட்டத்தை இயற்றுங்கள்,சட்டத்தை பின்பற்றுவோருக்கு பயன் இல்லாமல்,சட்டத்தை மீறுவோர் பயன் அடைவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். டெல்லி நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் இடிக்கப்பட உள்ள வீடுகளில் மத்திய அமைச்சர்களான அம்பிகா சோனி, அர்ஜீன் சிங் ஆகியோர் பங்களாக்களும் அடங்கும்.