இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு சீனா ஆதரவு : மன்மோகன் சிங்!
புதன், 16 ஜனவரி 2008 (13:26 IST)
சர்வதேச அணுசக்தி முகமை, அணு உற்பத்தி மூலப்பொருட்களை விற்பனை செய்யும் நாடுகளின் குழு முன்பு இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் போது சீனா, இந்தியாவுக்கு ஆதரவளிக்க வலியுறுத்தியதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
சீன சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் ஏர் இந்தியா விமானம்-1ல் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், சீன அதிபர் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள இந்தியாவின் உறுதித்தன்மைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்ததாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமக்கு உறுதியான, தெளிவான பதில் கிடைக்காத நிலையிலும், சீனாவுடனான உறவில் உள்ள நம்பகத்தன்மையும், உறுதியும் நமது முயற்சியில் நாம் தற்போது வெற்றிபெற உதவியுள்ளதாக தமக்கு தோன்றுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி மூலப்பொருட்கள் விற்பனை செய்யும் நாடுகள் குழுவில் இந்தியாவுக்கு, சீனா உதவுவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரதமர், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்புடைய நிறுவனங்களின் முன்பு விவாதத்திற்கு வரும் போது, சீனா தடையாக இருக்கும் என்று கருதவில்லை என கூறியுள்ளார். அதற்கான உத்தரவாதம் இன்று எனக்கு கிடைத்துள்ளது என்றும் நான் கூறவில்லை என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக எந்தவித உத்தரவாதத்தையும் தம்மால் தற்போது கூற முடியாது என்றும், ஆனால் அதேநேரத்தில் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களை தம்மால் ஏற்றுக் கொள்ள வைக்க இயலும் என்று நம்புவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், ஆனால் அரசு இந்த சிக்கல்களைத் தீர்க்க கடுமையாக உழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அணுசக்தி முகமை உடனான பேச்சுவார்த்தைக்கு நாள் இறுதிச் செய்வதிலும், இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதிலும் இடதுசாரிகளின் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர், பிரச்சனைகள் ஏராளம், அதனைத் தீர்வு காண நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள மன்மோகன் சிங், நம்பிக்கை இழக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளே எதிர்ப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசு பலதரப்பு ஒத்துழைப்பு அடிப்படையிலேயே முடிவை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார். ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்துவதில் சர்வதேச அணுசக்தி முகமையின் காலக்கெடு பற்றிக் கேட்ட போது, காலக்கெடு எதுவும் கிடையாது என்றும், அதேநேரத்தில் அரசு இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்துவதில் ஒரு படி முன்னெடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது முழுக்க முழுக்க இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இடையேயான நம்பிக்கை மற்றும் புரிந்துகொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். முதலில் இந்த ஒப்பந்தத்தை சர்வதேச அணுசக்தி முகமை அங்கீகரிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ள நிலையிலும், இன்னும் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டி உள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். இதற்கு காலக்கெடு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தமது சீன பயணத்தின் போது, அதிபர் ஹீஜிண்டாவோ, பிரதமர் வெண்ஜியாபோ ஆகியோருடன் ஆக்கப்பூர்வ பணிகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளின் அணுசக்தி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை உருவாக்குவது தொடர்பாகவும் பேச்சு நடத்தியுள்ளார். சீன அணுசக்தி குழுவின் தலைவர் இந்திய அணுசக்தி தலைவரைச் சந்திக்க வருமாறு இந்தியா விடுத்த அழைப்பை, பரிசீலிப்பதாக சீன அதிபர் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.