இடதுசாரிகள் எதிர்த்தால் அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிடுவோம்: பிரணாப் முகர்ஜி!
ஞாயிறு, 13 ஜனவரி 2008 (14:40 IST)
இடதுசாரிகளின் எதிர்ப்புத் தொடருமானால் இந்திய -அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிடும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், "இடதுசாரிகள் தங்களின் ஆதரவைத் திரும்பப் பெறுவதாக இருந்தால், இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்த மத்திய அரசு விரும்பாது. அதேநேரத்தில், அணுசக்தி ஒப்பந்தம் கைவிடப்பட்டால், உலக அளவில் இந்தியா கொண்டுள்ள நிலைபாடுகளுக்குச் சில பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது" என்றார்.
குஜராத், இமாச்சலப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து, இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் வலிமையை காங்கிரஸ் இழந்து விடவில்லை என்று குறிப்பிட்ட பிரணாப் முகர்ஜி, சிறுபான்மையினர் வாக்குகளை அணுசக்தி ஒப்பந்தம் பாதிப்பதாக இருந்தால், அதைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு திறனிருக்காது என்றார்.
இடதுசாரிகள் தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்துவரும் நிலையில், சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடந்துவரும் பேச்சுகள் திருப்திகரமாக முடிந்தால் மத்திய அரசு என்ன செய்யும் என்று கேட்டதற்கு, 'அது சுத்தமாக நடக்காத காரியம்' என்றார் பிரணாப் முகர்ஜி.
"நாங்கள் சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சு நடத்தப் போவதற்கு முன்பிருந்தே, அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்ற நிலைபாட்டில்தான் இடதுசாரிகள் உள்ளனர்.
ஆனால், ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் முயற்சிகளைத் தொடர்வதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம். அதில் சிறிது வெற்றியும் கண்டுள்ளோம்." என்றார் அவர்.
அப்படியென்றால், இடதுசாரிகளை வற்புறுத்துவதற்கு மத்திய அரசினால் முடியவில்லையா என்று கேட்டதற்கு, "இது வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள வைக்கும் விடயமல்ல. உண்மை நிலையைப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயம்." என்றார் பிரணாப்.
மேலும், தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் அடுத்த வாரம் இந்தியா நடத்தவுள்ள பேச்சுகள் வெற்றியடையும் என்று நம்புகிறோம் எனக் குறிப்பிட்ட அவர், அதன் இறுதி வடிவம் ஐ.மு.கூ. -இடதுசாரிகள் கூட்டத்தில் வைத்து விவாதிக்கப்படும் என்றார்.