இந்திய எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல்: பிரணாப் முகர்ஜி!
சனி, 12 ஜனவரி 2008 (11:54 IST)
இந்திய எல்லைக்குள் அவ்வப்போது சீன ராணுவத்தின் அத்துமீறல் இருந்து வருவதாகவும், அதை இருதரப்பு எல்லைப் பேச்சு மூலமாகத் தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:
சில நேரங்களில் ஊடுருவல் நிகழத்தான் செய்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் அவை உடனுக்குடன் கவனிக்கப்பட்டு சரி செய்யப்படுகிறது. இருதரப்பு சிறப்புப் பிரதிநிதிகளுக்கு இடையில் நடந்துவரும் எல்லைப் பேச்சிலும் இவ்விடயம் தீவிரமாக ஆராயப்படுகிறது.
இதனால், ஊடுருவல் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இருதரப்பு சிறப்புப் பிரதிநிதிகள், இச்சிக்கலுக்குத் தகுந்த தீர்வை விரைவில் கண்டறியும் நடவடிக்கைகளை நோக்கிச் சென்று கொண்டுள்ளனர். அதில் எங்களுக்குத் திருப்தி ஏற்பட்டுள்ளது.
சீனாவின் எல்லைப் பகுதியில் அவர்கள் மேற்கொண்டுள்ள அடிப்படைக் கட்டமைப்புகள், நமது கட்டமைப்புகளை விட மேம்பட்டவையாக உள்ளன. சாலைகள், மின்சாரம், குடிநீர் உள்பட அனைத்து வசதிகளையும் அவர்கள் சிறப்பாகச் செய்துள்ளது அனைவரும் அறிந்த உண்மை.
இதனால், நாமும் நமது பகுதியில் உள்ள சாலைகள், மின்சாரவசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தயாராகி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று சீனா புறப்படவுள்ள நிலையில், பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.