மிளிர்கிறது பங்குச் சந்தை, பரிதாப நிலையில் மக்கள்!
வியாழன், 10 ஜனவரி 2008 (21:32 IST)
பெரும்பாலான இந்திய மக்கள் சமூக, பொருளாதார ரீதியாக பரிதாப நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கையில் இந்திய பங்குச் சந்தை 21,000 புள்ளிகளைத் தாண்டியதை இந்த நாடு கொண்டாடி வருகிறது என்று ஆளும் ஐக்கிய முற்போக்கு அரசிற்கு ஆதரவு அளித்துவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
ஏழை - பணக்காரர் விகிதத்தை தடுக்காவிட்டால்,மதவாத சக்திகளின் வளர்ச்சியைத் தடுக்க இயலாமல் போகநேரிடும் என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை மார்க்ஸிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
மேலும் மத்திய அரசு உடனடியாக மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் மதவாத சக்திகள் நாட்டில் நிலவும் விலையேற்றம், வேலையின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க முடியாது. பெரும்பாலான மக்களின் வாழ்க்கை நிலையை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் ஏழை - பணக்காரர் பாகுபாடு தொடர்ந்து அதிகரித்து விடும் என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யச்சூரி கூறியுள்ளார்.
பங்குச் சந்தை மிகப்பெரிய வளர்ச்சி என்பதால் அரசுக்கு எந்த பலனும் இல்லை. இதன் மூலம் கிடைக்கும் கணக்கிட முடியாத லாபத்தில் ஒரு நையா பைசா கூட அரசுக்கு வரியாக கிடைக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த அபார உயர்வு இந்திய கோடிஸ்வரர்களின் பட்டியலைத்தான் அதிகரிக்க உதவும். சாமானிய இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தேவையான பல நூறு கோடி ரூபாய்கள் இத்துறைக்கு கொடுக்கப்படும் வரிவிலக்கால் தடைப்பட்டுப் போகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு வரி விதிப்பு முறையை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே கொண்டுவர அரசை மார்க்ஸிஸ்ட் கட்சி வலியுறுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் ஏழை - பணக்கார பாகுபாட்டிற்கு காரணம் அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் அமைப்புகளின் குறைபாடு மட்டும் காரணமல்ல, இந்த நிலை குறித்து அரசுக்கு உள்ள அக்கறையின்மைதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.