பாலாறு பிரச்சினை : தமிழக-ஆந்திர அரசுகளை அழைத்து ம‌த்‌திய அரசு பேச்சு நடத்த வேண்டும்: உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம்!

செவ்வாய், 8 ஜனவரி 2008 (10:02 IST)
பாலாறு அணை பிரச்சினை‌யி‌ல்‌ தமிழக -ஆந்திர அரசுகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசுக்கு உ‌ச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌ம் யோசனை தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே ஆ‌ந்‌திர அரசு தடுப்பணை கட்ட முய‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டு வரு‌கிறது. இ‌ந்த தடுப்பணை கட்டினால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆந்திரா அரசின் ‌இ‌ந்த திட்டத்தை எதிர்த்து ப‌ல்வேறு போராட்டம் நடத்த‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கூடாது என்று ஆந்திர அரசுக்கு உத்தரவிடக்கோரி உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. அ‌தி‌ல், இ‌ந்த வழக்கை விசாரித்து முடிக்கும் வரை, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று ஆந்திர அரசுக்கு உத்தரவிடுமாறும் தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோர் அடங்கிய அம‌ர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் நெடுமாறன், உமாபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆஜரா‌கி வாதிடுகையில், இந்த மனு நிலுவையில் இருக்கும்போதே பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

அதற்கு ஆந்திர அரசு சார்பில் ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர் ரெட்டி, நாங்கள் விதிமுறைகளை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆந்திர மக்களின் நலன் கருதி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்' என்றா‌ர்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பாலாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக - ஆந்திர மாநில அரசுகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உ‌ச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌த்தை அணுகுவதற்கு பதிலாக இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும்' என்று கேட்டுக்கொண்டனர். பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண நீதிபதிகள் 2 மாத கால அவகாசமும் அளித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்