பிரகாஷ் காரத்துடன் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு!
திங்கள், 7 ஜனவரி 2008 (14:04 IST)
தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதற்கு தீவிரமாக முயற்சித்து வரும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தை சந்தித்துப் பேசினர்.
புது டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பில், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினரான அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் சூழலில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக, பொதுப் பிரச்சனைகளில் இணைந்து போராடும் நோக்கமில்லாமல் தேர்தலுக்காக மட்டும் மூன்றாவது அணி அமைப்பதில் தங்களுக்கு விருப்பமில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.