டெல்லியில் அடையாள அட்டை கட்டாயம்!
சனி, 5 ஜனவரி 2008 (11:29 IST)
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் உள்ள ஒவ்வொருவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை வைத்திருப்பது கட்டாயமாகிறது.
இதன்படி பாதுகாப்புப் படையினர் எந்த இடத்தில் கேட்டாலும் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். இந்த உத்தரவு ஜனவரி 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, மாநில ஆளுநர் தேஜிந்தர் கன்னா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வேலைக்குச் செல்பவர்கள் தங்களின் பணியிட அடையாள அட்டைகளையும், மாணவ மாணவியர் தங்களின் பள்ளி அடையாள அட்டைகளையும் காட்டலாம்.
மற்றவர்கள் தங்களின் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமாவரி அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றையும் காட்டலாம்.
தலைநகர் டெல்லியின் மக்கள் தொகை தற்போது 1 கோடியே 60 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் அதிகரித்துவரும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்க இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்று அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், அரசின் இந்த முடிவுக்குச் சிலர் கடுமையான எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அடையாள அட்டைகள் ஏதுமில்லாத ஏழை எளிய மக்கள் அநியாயமாகத் தண்டிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாற்றுகின்றனர்.