பிரதமரின் சீனப் பயணம் : எல்லைப் பிரச்சனையில் பெரிய மாற்றம் இருக்காது -பிரணாப்!
வெள்ளி, 4 ஜனவரி 2008 (20:00 IST)
பிரதமரின் சீனப் பயணத்தினால் இந்திய- சீன எல்லைப் பிரச்சனையில் குறிப்பிடத்தக்க பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும், அதே நேரத்தில் தற்போது நடந்துவரும் பேச்சுகள் சரியான திசையில் செல்வது உறுதிப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக புது டெல்லியில் இன்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமரின் சீனப் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமையும் என்று நான் நம்புகிறேன். சீன கம்யூனிஸ்ட் கட்சியில் புதிதாக அமைந்துள்ள தலைமையுடன் அவர் விரிவான விவாதங்களை நடத்த உள்ளார்.
ஆனால், பிரதமரின் இந்தப் பயணத்தின் மூலம் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சில முக்கியமான பிரச்சனைகளில் அதிரடியான திருப்பங்கள் ஏற்படும் என்று நீங்கள் கருதினால், அதற்குச் சாத்தியமில்லை.
இந்திய- சீன எல்லைப் பிரச்சனையில் நாங்கள் சரியான திசையில் சென்று கொண்டுள்ளோம். இப்பிரச்சனை தொடர்பான பேச்சுகளில் சில வேகமாகவும், சில மெதுவாகவும் நடந்தாலும், இருதரப்பும் நிதானமாக உள்ளோம்.
இரு அரசுகளின் சிறப்புப் பிரதிநிதிகளுக்கு இடையில் நடக்கவுள்ள 11 ஆவது சுற்றுப் பேச்சுக்களின் போது சில முக்கியமான விவாதங்கள் நடக்கவுள்ளன.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
முன்னதாக வருகிற 13 ஆம் தேதி முதல் முறையாக சீனா செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், தனது 3 நாள் பயணத்தின் போது, சீன அதிபர் ஹூ ஜின்தாவோ, பிரதமர் வென் ஜியாபாவோ உள்படப் பல்வேறு முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.