கடந்த 2007-ஆம் ஆண்டில் அக்டோபர் 31ஆம் தேதி வரை 53,444 காலி பணியிடங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் முதியோர் ஓய்வூதிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்திய அரசு பொறுப்பேற்கும் பொழுது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கான காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்றும் தேசிய குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கூறியிருந்தது. இதனடிப்படையில் மத்திய அமைச்சகங்கள், துறைகள் அவற்றை சார்ந்த துணை அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி நிலவரப்படி சுமார் 74,008 காலி இடங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதில் நேரடி நியமனமும் பதவி உயர்வு நியமனமும் அடங்கும். அதாவது நேரடி நியமன ஒதுக்கீட்டில் 26,358 பணியிடங்களும், பதவி உயர்வு மூலம் 47,650 பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டும்.
மத்திய அரசு மேற்கொண்ட தீவிர முயற்சியின் பயனாக 53,444 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. அதாவது நேரடி நியமனம் மூலம் 20,466 பணியிடங்களும் பதவி உயர்வு மூலம் 32,998 பணியிடங்களும் நிரப்பட்டன. பதவி உயர்வு முறையில் நிரப்பப்பட வேண்டிய 13,164 பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் இல்லை.
இவ்வாறு மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் முதியோர் ஓய்வூதிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.