நாடாளுமன்றத் தாக்குதல்: செளகத் குரு மனு 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.
வியாழன், 27 டிசம்பர் 2007 (12:46 IST)
கடந்த டிசம்பர் 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள செளகத் ஹீசைன் குரு, தனக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மனு வரும் 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் 153-ஏ பிரிவின் கீழ் செளகத் ஹீசைன் குருவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையை தனி நீதிமன்றம் வழங்கி தீர்ப்பளித்தது.
இந்திய தண்டனைச் சட்டம் 153-ஏ (அரசுக்கு எதிராக பகைமையை உருவாக்குதல்) பிரிவின் கீழ் தன் மீது ஒருபோதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றும், அதே நேரத்தில் தமக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 153-ஏ பிரிவின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட குற்றச்சாற்றுகள் குறித்து வழக்கு விசாரணையின் போது விளக்கம் அளிக்க தமக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்றும், எனவே தனக்கு வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் செளகத் ஹீசைன் குரு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி. நவ்லேக்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன் ஆஜரானார்.
வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட எந்தவொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்கள் மீதான குற்றச்சாற்றை மறுக்க உள்ள வாய்ப்பை தராமல் இருப்பதன் மூலம் ஒருவரின் சுதந்திரத்தை பறிக்கக் கூடாது. தனிமனித சுதந்திரம் முக்கியமான அடிப்படை உரிமைகளில் ஒன்று மட்டுமல்ல என்று கூறியுள்ள அவர் , தனி மனிதர்களுக்கு இழைக்கப்படும் இது போன்ற கொடுமைகள் மனித உரிமை மீறலுக்கு வழிவகுத்து விடும் என்று மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் முகமது அப்சல் குருவுடன் சேர்த்து செளகத் குருவுக்கும் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கூட்டுச் சதியில் செளகத் குருவுக்கு பங்கில்லை என்பதைத் தொடர்ந்து மரணதண்டனையை 10 ஆண்டுசிறைத் தண்டனையாக குறைத்தது.
இவ்வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவின் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில்,அப்சலின் கருணை மனு குடியரசுத் தலைவரின் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.
செளகத் குருவின் மேல்முறையிட்டு மனு, மறு ஆய்வு மனு, மறு மறு ஆய்வு மனு (CURATIVE PETITION) அகியவற்றை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தள்ளபுடி செய்திருந்த நிலையில் தற்போது புதிதாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு வரும் 4 -ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அப்சல் குருவுக்கு மரணத் தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக பல்வேறு தரப்பில் இருந்து குற்றச் சாற்றுகள் உள்ள நிலையில் இம்மனு மீண்டும் உச்ச நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தலைவலியைத் தரும் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் 5 காவல் துறையினர்,4 பொதுமக்கள்,தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.