இந்திய- சீன எல்லைப் பிரச்சனை: பேச்சின் மூலம் தீர்க்க உறுதி!
புதன், 26 டிசம்பர் 2007 (10:45 IST)
இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையை பேச்சின் மூலமே தீர்வு காண்பது என்று இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்திய - சீன ராணுவத்தினர் முதன்முதலில் சீனாவின் குன்மிங் நகரத்தில் இணைந்து நடத்திய கூட்டுப் பயிற்சிகள் நேற்று நிறைவு பெற்றன.
நிறைவு விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சுஷீல் குப்தா, "இருநாட்டு ராணுவத்துக்கும் இடையிலான நல்லுறவுகள் வலுவான நிலையில் உள்ளன. மற்ற பிரச்சனைகள் உரிய முறையில் ஏற்கெனவே பேசப்பட்டு வருகின்றன" என்றார்.
மேலும், பிரதமர் மன்மோகன் சிங்கின் சீனப் பயணத்தின்போது இருநாட்டு உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீன ராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எம்.ஏ.ஜியாவோ தியானும் இதே கருத்தை பிரதிபலித்தார்.
"இந்திய- சீன பிரச்சனைகளை அரசியல் ரீதியாக மட்டுமே தீர்க்க வேண்டும். நம்பிக்கை, புரிந்துணர்வு ஆகியவற்றைப் படிப்படியாக வளர்ப்பதன் மூலம் இரு நாடுகளும் வளர்ச்சியை அடைய முடியும். இதுதான் இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்" அவர்.
இதற்கிடையில், இந்த ராணுவக் கூட்டுப் பயிற்சி எந்த ஒரு மூன்றாவது நாட்டுக்கும் எதிரானது அல்ல என்றும், வேறோரு நாட்டின் ராணுவ உதவியைப் பெறுவதற்காகவும் அல்ல என்றும் சீனா தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ராணுவக் கூட்டுப் பயிற்சியின் நிறைவு விழாவில், இருநாட்டு ராணுவத்தினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சீன பெண்களின் நடனம், இந்திய ராணுவத்தினரின் நாட்டுப்பற்று பாடல்களின் இசைக் கச்சேரி ஆகியவை இதில் இடம்பெற்றன.