குஜராத் தேர்தல் : பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது

ஞாயிறு, 23 டிசம்பர் 2007 (11:47 IST)
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஊடகங்களின் கணிப்புகளை எல்லாம் தாண்டி நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதாக் கட்சி பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 182 தொகுதிகளுக்கும் முன்னணி நிலவரம் உறுதியாகத் தெரிய வந்துள்ள நிலையில், பாரதிய ஜனதாக் கட்சி 116 தொகுதிகளைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.

காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகளும் சுயேட்சைகளும் ஆறு இடங்களில் முன்னணியில் உள்ளனர்.

ஐந்தாண்டு கால மோடியின் ஆட்சிக்கும், அவரது அணுகுமுறைக்கும் ஒரு சவாலாகக் கருதப்பட்ட இத்தேர்தலில் அவர் மீண்டும் பெரும் வெற்றி பெற்று 3வது முறையாக குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

குஜராத்தின் செளராஷ்டிரா பகுதியில் பாஜகவிற்கு பெருத்த பின்னடைவு ஏற்படும் என்று வெளிவந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாகி அங்கும் மோடியின் செல்வாக்கினால் பாஜகவிற்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.

2002ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 127 இடங்களில் வெற்றி பெற்றது. தற்பொழுது 10 இடங்களில் குறைந்தாலும், அக்கட்சி அருதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

காங்கிரஸ் கட்சியின் பலம் 51 இடங்களில் இருந்து 60 ஆக உயரும் நிலை இருந்தாலும், அக்கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

மணி நகர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் நரேந்திர மோடி தன்னை எதிர்த்து போட்டியிடும் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான தின்ஷா பட்டேலை விட 21,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.

மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்ற சிலரைத் தவிர பெரும்பாலானோர் முன்னிலையில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்