பக்ரீத் திருவிழாவையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாடு முழுவதும் வாழும் முஸ்லீம் மக்களுக்கு தமது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த விழா பணி - தியாகத்தின் நிலைப்பாட்டையும் உணர்த்தும் விழாவாக அமைந்துள்ளதை நமது மனதில் கொள்வதுடன், இந்நன்னாளில் நாட்டின் வளர்ச்சிக்கும் - மேம்பாட்டிற்கும் முனைப்புடன் பாடுபட உறுதியேற்கவும் அவர் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் :கடவுள் மனிதனிடத்தில் எதிர்பார்க்கும் தியாகத்தை நமக்கு உணர்த்தும் விழாவாக பக்ரீத் பெருவிழா கொண்டாடப்படுவதாக குடியரசுத் துணைத் தலைவர் அன்சாரி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்த நன்னாளில் பகிர்தலினால் உருவாகும் மகிழ்ச்சியும், தர்மம், தானங்களால் ஏற்படும் மன நிறைவோடு, அவை ஏழை - எளிய மக்களையும் மேம்படுத்துகிறது. அதேபோன்று நம்மை எல்லாம் சகோதரத்துவத்தில் இணைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்விழாவை பரிவுணர்வுடனும், இரக்கத்துடணும் கொண்டாடுவதோடு, மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பணியாற்றவும் குடியரசுத் துணைத் தலைவர் அன்சாரி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் :
பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஹசரத் இப்ராகிமின் தியாகத்தின் தன்மையை வெளிப்படுத்தும் விழாவாக பக்ரீத் விழா அமைந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த சுயநலமற்ற தியாகநிகழ்வு, ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க நம்முடைய சுயநலன்களை தியாகம் செய்வதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும் என்று கூறியுள்ளார்.
ஏழை - எளிய, சமூகத்தின் கடைநிலையில் உள்ள மக்கள், உதவி தேவைப்படும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்பாடு அடையச் செய்ய இந்த நல்ல நாளில் நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்விழா நம்நாட்டின் பண்பாட்டை மென்மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என்று தாம் நம்புவதாகவும், பக்ரீத் விழாவை கொண்டாடும் அனைவரும் மகிழ்ச்சியும், வளமும் பெற்று வாழ வாழ்த்துவதாகவும் தமது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.