பயங்கரவாத எதிர்ப்புப் போரில் மொரீசியஸ் ஒத்துழைப்பு: பிரணாப் முகர்ஜி!
புதன், 19 டிசம்பர் 2007 (14:17 IST)
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு வழங்கும் ஒத்துழைப்பை அதிகரிக்க மொரீசியஸ் முடிவு செய்துள்ளது என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இந்திய-மொரீசியஸ் கூட்டுக் குழுவின் 10 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மூன்று நாள் பயணமாக மொரீசியஸ் சென்றுள்ள பிரணாப் முகர்ஜி, அந்நாட்டு துணை பிரதமரும் நிதியமைச்சருமான ராமகிருஷ்ண சிதானெனைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது கலாச்சாரப் பரிமாற்றம், தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்புடைய 30 அம்ச ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பிரணாப் முகர்ஜியுடன், அந்நாட்டு அயலுறவு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மதன் முரளிதர் துல்லூ கையெழுத்திட்டார்.
இதையடுத்துச் செய்தியாளர்களைச் சந்தித்த பிரணாப் முகர்ஜி, "பயங்கரவாதத்தின் எல்லா வடிவங்களையும் இருநாடுகளும் தீவிரமாக எதிர்க்கின்ற காரணத்தால், பயங்கரவாத எதிர்ப்புப் போரில் இணைந்து போரிட முடிவு செய்துள்ளன" என்றார்.