பொதுநல மனுக்கள் : விரைவில் நெறிமுறை - உச்ச நீதிமன்றம்!
வெள்ளி, 14 டிசம்பர் 2007 (20:25 IST)
நிர்வாகம், நாடாளுமன்றம் ஆகியவற்றின் செயல்பாடுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் பொதுநல மனுக்களை விசாரணைக்கு ஏற்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது!
அரசு நிர்வாகத்திலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் மற்ற சமூக செயல்பாடுகளிலும் நீதித்துறை தேவையற்று தலையிடக்கூடாது என்று பொதுநல மனு ஒன்றின் மீதான விசாரணையில் நீதிபதிகள் ஏ.கே. மாத்தூர், மார்கண்டேய கட்ஜூ ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு நேற்று முன்தினம் கருத்து தெரிவித்திருந்தது.
நீதித் துறையின் தீவிரச் செயல்பாடு (Judicial Activism) என்ற கோட்பாட்டின்படி, நீதிமன்றங்கள் அரசு நிர்வாகத்திலும், சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதும், தீர்ப்புகளின் மூலம் புதிய சட்டங்களை உருவாக்குவதும் அரசமைப்பு அளித்துள்ள சமச்சீர் தன்மையை சீர்குலைத்துவிடும் என்று நீதிபதிகள் மாத்தூர், கட்ஜூ ஆகியோர் கூறியிருந்தனர்.
இதனையடுத்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டபோது, அதனை தாங்கள் விசாரிப்பதா கூடாதா என்பது குறித்து தெளிவற்ற நிலை உள்ளதாகக் கூறி நீதிபதி எஸ்.பி. சின்ஹா தலைமையிலான நீதிமன்ற அமர்வு கூறிவிட்டது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவிலும், பிருந்தாவனிலும் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் விதவைகளின் நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான நீதிமன்ற அமர்வு, பொதுநல வழக்குகளை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விரைவில் ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அளிக்கும் என்று கூறினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் ஏ.கே. மாத்தூர், மார்கண்டேய கட்ஜூ ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு நீதித்துறையின் தீவிரச் செயல்பாடு குறித்து கூறிய கருத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கட்டுப்படுத்தாது என்று நேற்று விளக்கம் அளித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், இன்று பொதுநல வழக்குகளை விசாரணைக்கு ஏற்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.