தரையில் இருந்து அணு ஆயுதத்தை ஏற்றிச் சென்று விண்ணில் உள்ள இலக்கை தாக்கும் `ஆகாஷ்' ஏவுகணை சோதனையை இந்தியா இன்று இரண்டாவது நாளாக வெற்றிகரமாக நடத்தியது.
ஒரிசா மாநிலம் சந்திப்பூர் அருகே உள்ள பாலாசோர் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் (ஐ.டி.ஆர்), எதிரி விமானங்கள் உள்ளிட்ட விண் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை நடந்த, தரையில் இருந்து இருந்து ஏவப்பட்டு விண்ணில் உள்ள இலக்கை தாக்கும் `ஆகாஷ்' ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது.
இதையடுத்து இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தப்பட்டது. முன்னதாக ஆளில்லா விமானம் ஒன்று காலை 11.30 மணிக்கு அனுப்பப்பட்டது.
அதை தொடர்ந்து ஐ.டி.ஆர். மையத்தில் இருந்து 11.55-க்கு `ஆகாஷ்' ஏவுகணை அனுப்பப்பட்டது. அது, மிகச் சரியாக இலக்கை தாக்கி அழித்தது. இதன் மூலமாக ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்தது.
இன்னும் 9 நாட்களுக்கு இந்த சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும். அதன் பிறகு இந்திய விமானப் படையில் இந்த ஏவுகணை சேர்க்கப்படும்.
சுமார் 700 கிலோ எடை கொண்ட ஆகாஷ் ஏவுகணை, 5.6 மீட்டர் உயரம் உடையது. இந்த ஏவுகணையால், 50 கிலோ எடையிலான வெடிபொருளை எடுத்துக் கொண்டு விண்ணில் 25 கி.மீ., உயரத்தில் பறக்கும் ஏவுகணை அல்லது எதிரி விமானத்தை வழி மறித்து தாக்கி அழிக்க முடியும்.