உருகி வரும் பனிமலைகளால் 50 கோடி இந்தியர்களுக்கு ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
வியாழன், 13 டிசம்பர் 2007 (15:18 IST)
இமயமலையில் உள்ள பனிமலைகள் கடந்த 50 ஆண்டுகாலமாக படிப்படியாக குறைந்து கொண்டே வருவது, இந்திய துணைக்கண்டத்தில் வசிக்கும் 50 கோடி மக்களின் வாழ்வில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு திபெத்தில் கடல் மட்டத்திலிருந்து 6,050 மீட்டர் (19,849 அடி) உயரத்தில் அமைந்துள்ள நைமோனாநிய் என்ற பனிமலையை குடைந்து பார்த்ததில், இந்த பனி மலைமட்டும் கதிர் இயக்க சமிங்ஞையற்ற நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் உலகின் மற்ற பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சமிங்ஞை இல்லாமல் போனதற்கு காரணம், கடந்த 50 ஆணடுகளுக்கு முன்பு அணுகுண்டு சோதணைநடத்தப்பட்டதாலும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். இந்த எண்ணம் உண்மையாகும் நிலையில், நன்னீரை தன்னகத்தேகொண்டுள்ள இந்த பனிமலைகள் சிறிது, சிறிதாக சிறுத்துப் போய் பின்னர் இல்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும் இதனால் இந்திய துணைக் கண்டத்தில் வாழும் சுமார் 50 கோடி மக்களின் நிலை மிகப் பெரிய கேள்விக்குறியாகி விடும் எனவும் கூறியுள்ளனர். இமயமலைப் பகுதியில் 15,000 க்கும் மேற்பட்ட பனிமலைகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து ஒரு நீண்ட சங்கிலித் தொடராக உள்ளதாக கணித்துள்ளனர். உலகின் இந்த பகுதியில் உள்ள நன்னீர் இந்த பனிப் பிரதேசங்களில் தான் சேமித்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சுமார் 12,000 கன கிலோமீட்டர் அளவு நன்னீர் இமயமலையில் உள்ள பனி மலைகளில் சேர்த்து வைக்கப்பட்டு உள்ளதாக ஒஹையோ மாகாண பல்கலைக் கழகத்தின் புவியியல் பேராசிரியர் விஞ்ஞானி லோனி தாம்ஸன் தெரிவித்துள்ளார்.
இந்த பனிப்பாறைகள் ஆண்டுதோறும் உருகி கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதிகளில் நீரோட்டத்தை உருவாக்குகின்றன. இந்த பனிப்பாறைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டு இதனை நம்பியுள்ள இந்திய துணைக் கண்டத்தில் வாழும் 50 கோடி மக்கள் பாதிக்கப் படுவார்கள் என்று எச்சரித்துள்ளனர்.
உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திபெத் பீடபூமியில் உள்ள பனி மலைகள் தற்போது உள்ள அளவில் இருந்து 2030 -ம் ஆண்டில் 80 விழுக்காட்டுக்கு குறையும் என்றும் லோனி தாம்ஸன் தெரிவித்துள்ளார்.