கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியினருக்கு பாராட்டு விழா பெங்களூரில் நடந்தது. இதில் ஆட்சியை பறி கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எட்டியூரப்பா கலந்து கொண்டு பேசுகையில், தேவகவுடா நம்மை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார். அவரது கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக நம்மிடம் வாக்குறுதி கொடுத்து பின்னர் தேவையற்ற நிபந்தனைகளை விதித்தார்.
அவர்கள் கொடுத்த வாக்குறுதியை மீறி செயல்பட்டனர். எனவே ஜனதா தளம் (எஸ்) மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. வருகிற சட்டமன்ற தேர்தலில் 224 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடனும் கூட்டணி கிடையாது. தனித்து நின்று பலத்தை நிரூபிப்போம்.
இந்த நேரத்தில் நாம் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டியது அவசியம். எந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மறந்து விட்டு கட்சிக்காக பாடுபடுங்கள். கோஷ்டி அரசியல் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று எட்டியூரப்பா கூறினார்.