பாழாய் போன நிலத்தடி நீரால் பஞ்சாப் மக்களைத் தாக்கும் புற்றுநோய்!
Webdunia
சனி, 1 டிசம்பர் 2007 (17:36 IST)
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நிலத்தடி நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், இதனைக் குடிக்கும் மக்களுக்கு மரபணு ரீதியாக மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளதாகவும் அம்மாநில குடிநீர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த ஆராய்ச்சிக்குழு எச்சரித்துள்ளது.
இந்த ஆராய்ச்சியை சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மையத்தைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள் குழு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு இந்த முடிவை அளித்துள்ளனர்.
மாசு அடைந்துள்ள நிலத்தடி நீரை குடிக்கும் மக்களுக்கு அவர்களின் உணவு வழியாக பூச்சிக் கொல்லிகளும், கனரக இயந்திரப் பொருட்களின் துகள்களும் உடலில் சென்று புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களை உருவாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த வகையான நோய்கள் பரவலாக காணப் படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில் 80 விழுக்காட்டிற்கும் மேலான மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் பாதரசத்தின் அளவு அதிகமாக உள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 70 விழுக்காடு மாதிரிகள் வழவழப்பான தன்மையுடையதாகவும், 57.5 விழுக்காடு மாதிரிகளில் கொடிய நஞ்சுத்தன்மை கலந்தும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
லூதியானா, அமிர்தசரஸ், ஜலந்தர், நவான்சாகர் ஆகிய நகரங்களில் உள்ள வடிகால்களில் சாக்கடை நீர் தேங்கியுள்ளதாகவும், இவற்றில் அதிகபட்ச அளவில் பூச்சிக் கொல்லிகள் உள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்த பகுதிகளில் வாழும் மக்களிடம் ரத்தங்களை பரிசோதித்து பார்த்ததில் 65 விழுக்காடு பேரின் டி.என்.ஏ மூலக்கூறில் மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். நிலத்தடி நீரின் தற்போதைய நிலையை மாற்ற எடுக்கப் படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, குழுவின் பரிந்துரைகள் மீது அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக பஞ்சாப் மாநில குடிநீர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் யோகேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைக்கு தொழிற்சாலைகள் மட்டும் காரணமல்ல என்றும், அதிகப்படியான பூச்சிக் கொல்லி மருந்துகளை விவசாயத்துக்கு பயன்படுத்துவதும் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். குடிநீர் வழங்கல், கழிவு நீர் அகற்றல் தொடர்பான பணிகளை தொடர்ந்து கண்காணிப்பது, திடக் கழிவுகளை அகற்ற கிராம குழுக்களைப் பயன்படுத்துவது, தொழிற்சாலைகள் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்த வழிமுறை உருவாக்குவது தொடர்பாகவும் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் யோகேஷ் கோயல் கூறியுள்ளார்.