இந்தியர் பிரச்சனை : மலேசிய அரசுடன் பேசுவோம் - பிரணாப்!

Webdunia

வெள்ளி, 30 நவம்பர் 2007 (16:34 IST)
மலேசிய இந்தியர்கள் கடந்த 25 ஆம் தேதி நடத்திய பேரணியின் மீது அந்நாட்டுக் காவல் துறையினர் நடத்திய தாக்குதல் குறித்தும், தமிழக முதல்வர் எழுதிய கடிதம் குறித்து மலேசிய அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்தும் அந்நாட்டு அரசுடன் பேசுவோம் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்!

மாநிலங்களவையில் இன்று, தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் மலேசிய இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்துப் பேசினர்.

இப்பிரச்சனையில் அரசின் நிலையை விளக்கிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்து பேசிய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அயல்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரின் நலனில் அரசு ஆழ்ந்த அக்கரை கொண்டுள்ளது என்று கூறினார்.

"மலேசிய இந்தியர்கள் நடத்திய பேரணியில் அந்நாட்டு காவல்துறை நடத்திய தாக்குதல் மற்றும் நமது மதிப்பிற்குரிய தலைவர் கருணாநிதிக்கு எதிராக அந்நாட்டு அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் ஆகியன குறித்து அந்நாட்டு அரசுடன் பேசுவோம்" என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.

தங்களை இந்தியாவில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக மலேசியாவிற்கு அழைத்துச் சென்ற இங்கிலாந்து அரசின் மீது தொடர்ந்த வழக்கிற்கு ராணி எலிசபெத்தின் ஆதரவு கோரி பிரிட்டிஷ் தூதரகத்தில் மனு அளிப்பதற்காகவே அந்தப் பேரணி நடத்தப்பட்டதாகவும், அந்நாட்டு குடிமக்களாக உள்ள ஏராளமான இந்தியர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டதாகவும் கூறிய பிரணாப் முகர்ஜி, அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மலேசிய அரசிடம் மத்திய அரசு பேசும் என்று கூறினார்.

முன்னதாக, அவையில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க., பா.ஜ.க. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள், பிரதமருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்தின் மீது மலேசிய அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் அத்துமீறியவை என்று குறிப்பிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்