அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக பெரும்பான்மை : இடதுசாரி!

Webdunia

வியாழன், 29 நவம்பர் 2007 (20:43 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் மீது மக்களவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் அதனை எதிர்த்துள்ளது தங்களுடைய நிலையை நியாயப்படுத்தியுள்ளது என்று இடதுசாரி தலைவர்கள் கூறியுள்ளனர்!

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், 123 ஆகியவற்றின் மீது மக்களவையில் நேற்றும், இன்றும் நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பல்வேறு கட்சிகளின் 29 உறுப்பினர்களில் பெரும்பான¨யோர், அது நமது தேசத்தின் நலனிற்கு முற்றிலும் எதிரானது என்பதனை விளக்கியதாக யு.என்.ஐ. செய்தியாளரிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி. பரதன் கூறினார்.

இடதுசாரிகளின் அணியில் இருந்துகொண்டு இதுவரை அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்து வந்த ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் உறுப்பினர் ராம்கிருபால் யாதவ், ஒப்பந்தத்திற்கு ஆதரவாக பேசினாலும் இறுதியில் முடிக்கும் போது, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிராக போராடுவதில் தமது கட்சி உறுதியாக உள்ளது என்பதைக் கூறியதை அக்கட்சியின் தேச செயலர் ஷாமிம் ·பைசி சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவ சேனா ஆகிய கட்சிகள் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்திருப்பதால், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை அதனை எதிர்ப்பது உறுதியாகிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாசுதேவ் ஆச்சாரியாவும், ரூப்சந்த் பாலும் கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்