நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2007 (17:14 IST)
நந்திகிராம் படுகொலைகள் மீது உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இன்று காலை மக்களவை கூடியதும் அவையின் மையத்திற்கு வந்த பா.ஜ.க. உறுப்பினர்கள், கேள்வி நேரத்தையும், நேரமில்லா நேரத்தையும் ஒத்தி வைத்துவிட்டு நந்திகிராம் விவகாரத்தை விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதே நிலை மாநிலங்களவையிலும் ஏற்பட்டது.
மக்களவையில் அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தினார்.
''உங்களின் கருத்தை நான் நிராகரிக்கவில்லை. நந்திகிராம் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்கிறேன். ஆனால், கேள்வி நேரம் முடிந்து விடட்டும்'' என்றார் அவர்.
ஆனால் மக்களவைத் தலைவரின் வேண்டுகோளிற்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் சிறிதும் செவி சாய்க்காமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். நந்திகிராம் விவகாரத்தை உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று கோரி கூச்சலிட்டனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் அவையைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே முதலில் 12 மணி வரையும், பிறகு 2 மணி வரையும், இறுதியாக நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேற்குவங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், அம்மாநில அரசைக் கலைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அவர்களை அமைதியாக இருக்குமாறும், அவை நடவடிக்கைகளை தொடர்வதற்கு அனுமதிக்குமாறும் அவையின் துணைத் தலைவர் ரஹ்மான் கான் மீண்டும், மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எனவே மாநிலங்களையும் முதலில் 12 மணி வரையும், பிறகு நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இரு அவைகளிலும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களின் இருக்கைகளில் அமரவே இல்லை. அவை மத்தியில் வந்து நின்று கூச்சலிடவே அவர்கள் விரும்பினர்.
ஒருகட்டத்தில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, ''முழுமையான உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமல், அவைத் தலைவரைக் கட்டாயப்படுத்த விரும்புகிறீர்கள்.
நேற்று எனது அறையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினேன். அப்போது குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக அவர்கள் அளித்துள்ள ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு விதிகள் அனுமதிக்காத காரணத்தால் அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்தேன்.
வேறு ஏதாவது விதியின் கீழ் விவாதம் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டி எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கீது கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
அதன்படி மற்றோரு தாக்கீதை பெற்றேன். பிறகு மீண்டும் 1.15 மணியளவில் இது தொடர்பாக விவாதிப்பதற்காக பல்வேறு கட்சித் தலைவர்களின் கூட்டத்தையும் கூட்டினேன்.
இவையெல்லாம் நடந்த பிறகும் அவையை இயங்கவிடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவது, நீங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயத்தை மறுப்பதுபோல உள்ளது'' என்றார்.
அதற்குப் பிறகு, அவை நடவடிக்கை தொடர்பாக பல்வேறு உறுப்பினர்கள் கொடுத்துள்ள தாக்கீதுகளின் பட்டியலை சோம்நாத் சாட்டர்ஜி வாசிக்கத் தொடங்கினார்.
ஆனால், அவைத் தலைவரின் எந்த சமரச முயற்சியையும் மக்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதேபோல, மாநிலங்களவையில் அவையின் துணைத் தலைவர் ரஹ்மான் கான் எடுத்த சமரச முயற்சிகளும் தோல்வியடைந்தன.
இறுதியில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இரண்டாவது நாளாக ஒத்தி வைக்கப்படுவதற்கு நந்திகிராம் என்ற ஒரே விவாரம் மட்டும் காரணமாகிவிட்டது.