நந்திகிராம் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று கோரி முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை கூடிய சிறிது நேரத்திலேயே தள்ளிவைக்கப்பட்டன.
இன்று காலை மக்களவை கூடியதும், பாஜக உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து, கேள்வி நேரத்தை தள்ளிவைத்துவிட்டு நந்திகிராம் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
நந்திகிராம் விவாதிக்கப்படும்வரை நாடாளுமன்றத்தை இயங்கவிட மாட்டோம் என்று முழக்கமிட்டனர்.
பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டுக் கொண்டிருந்த நிலையில், அக்கட்சியின் மக்களவைத் துணைத் தலைவர் விஜயகுமார் மல்கோத்ராவை நோக்கிப் பேசிய அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, "இப்பிரச்சினையை பற்றி விவாதிப்பது குறித்து நான் என்ன கூறினேன் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் நடவடிக்கைகளை இந்த நாடு பார்க்கட்டும். இந்திய மக்கள் பார்க்கட்டும். இங்கு முழக்கமெழுப்புவதற்குத்தான் இவர்களை நாம் அனுப்பிவைத்தோமா என்று சிந்திக்கட்டும், இது அவமானகரமானது. நீங்கள் அவைத் தலைவருடன் ஒத்துழைக்க மறுக்கிறீர்கள்" என்று கூறினார்
சிறிது நேரத்திற்குப் பிறகு எழுந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, நந்திகிராம் உள்ளிட்ட எந்தப் பிரச்சினையையும் இந்த அவையில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. கேள்வி நேரம் முடிந்த பின் அதனை எவ்வாறு விவாதிப்பது என்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று கூறினார்.
ஆனால் அதற்கு செவி மடுக்காத பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டபடியே இருந்தனர். சற்றேரக் குறைய 25 நிமிடங்கள் இந்த நிலையே நீடித்தது. அதன்பிறகு அவை நடவடிக்கைகளை 15 நிமிடத்திற்கு தள்ளிவைப்பதாக அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.
மாநிலங்களவையும் தள்ளிவைப்பு
மாநிலங்களவை இன்று காலை கூடியதும், பாஜக உறுப்பினர்கள் சிலர் அவையின் மையப் பகுதிக்கு வந்து, "முதலில் நந்திகிராம். பிறகு மற்றவை என்று முழக்கமிட்டனர்." அவர்களை அமைதிப்படுத்த முயன்றார் அவைத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவரமான ஹமீத் அன்சாரி. ஆனால் முழக்கம் தொடர்ந்த வாறு இருக்க அவை நடவடிக்கைகளை நண்பகல் 12 மணி வரை தள்ளிவைப்பதாக அறிவித்தார்.