முக்கியத் தலைவர்களைக் கடத்த பயங்கரவாதிகள் திட்டம்!
Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2007 (16:50 IST)
உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளும் ராகுல் காந்தி உள்பட பல்வேறு முக்கியத் தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதன் மூலம் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் இன்று பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு காவல்துறை தலைவர் விக்ரம் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்த விவரங்கள் வருமாறு:
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் நமது நாட்டில் உள்ள முக்கியத் தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று உளவுத்துறை மூலம் தகவல்கள் வந்தன. இதனடிப்படையில் இன்று லக்னோவில் சிறப்பு அதிரடிப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது லக்னோவை நோக்கி வேகமாக வந்த காரைக் காவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால், அதிலிருந்தவர்கள் காவலர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். உடனடியாகக் காவலர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து காரை மடக்கிப் பிடித்தனர். காருக்குள், பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் இருந்தனர். அவர்களைக் கைது செய்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
பயங்கரவாதிகள் 3 பேரும், முக்கியத் தலைவர்களைக் கடத்துவதற்கு சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றிருந்தனர். கடத்தலின் போது பலமணி நேரத்திற்கு ஒரு கையில் உணவை வைத்துக் கொண்டு மறுகையில் குண்டை எறியும் வழிமுறைகள் அவர்களுக்குத் தெரிந்துள்ளன. இணையதளம் வழியாக முக்கியத் தலைவர்களின் வீடுகள், பேரணிகள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றின் புகைப்படங்களைப் பெற்று கடத்தல் திட்டங்களை உருவாக்கியிருந்தனர்.
தலைவர்களுக்கு பதிலாக, ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 42 பயங்கரவாதிகளை விடுவிக்கக் கோரிக்கை வைப்பதற்குத் திட்டமிட்டிருந்தனர். இதில், நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குரு, நஸ்ருல்லா மன்சூர், அப்துல் மஜீத், எம்டி அஸ்லாம், மன்சூர் ஹூசைன், காலித் மெகமூத், யூசுப் நேபாளி, அப்துல் லத்தீப், அக்ரம் பலூச், அப்துல் ஹாய் ஆகியோரும் அடக்கம்.
விடுவிக்கப்படும் பயங்கரவாதிகள் ஒவ்வொருவருக்கும் 5,000 டாலர் தொகையைத் தரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கவும், தலைவர்களைக் கடத்திய பிறகு அரசுடன் பேச்சு நடத்த பி.பி.சி. நிறுவனத்தின் ஊழியர்களான அல்டாப் ஹூசைன், யூசுப் ஜமீல் ஆகியோரை அழைக்கவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 2 ஏ.கே.47 துப்பாக்கிகள், 3 சீனா கைத்துப்பாக்கிகள், 12 கையெறி குண்டுகள், 120 தோட்டாச் சரங்கள், 4 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், போலி ஜம்மு-காஷ்மீர் அரசு அடையாள அட்டைகள், ஜம்முவிலிருந்து புதுடெல்லிக்கு நவம்பர் 14 ஆம் தேதி வருவதற்கான ரயில் பயணச் சீட்டுகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன என்று காவல்துறை தலைவர் விக்ரம் சிங் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளின் கடத்தல் திட்டத்தில் ராகுல் காந்தியின் பெயர் இருந்ததா என்ற கேள்விக்கு வெளிப்படையாக பதிலளிக்க விக்ரம் சிங் மறுத்துவிட்டார்.