கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கப்படுமா? என்று இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தெரிவித்தது. இரு கட்சிகளும் இணைந்து கடந்த 27 ஆம் தேதி, தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் கொடுத்தன. ஆனால் ஆட்சி அமைக்க மாநில பா.ஜ தலைவர் எடியூரப்பாவை ஆளுநர் இன்னும் அழைக்கவில்லை. ஜனாதிபதி பிரதிபா பாடீலுக்கு புதன் கிழமையன்று கர்நாடக ஆளுநர் ராமேஷ்வர் தாகூர் கர்நாடக அரசியல் நிலைமை குறித்து அறிக்கை அனுப்பினார்.
இந்த அறிக்கையில் பாரதிய ஜனதாவுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது பற்றி மட்டும் இடம் பெற்று இருப்பதாகவும், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எவ்வித பரிந்துரையையும் ஆளுநர் தெரிவிக்கவில்லை என்று விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கர்நாடக நிலைமை பற்றி எதுவும் விவாதிக்கப் படவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கர்நாடக நிலைமை பற்றி விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
நேற்று பாரதிய ஜனதா கட்சிக்கு, மதச்சார்பற்ற ஜனதா கட்சித் தலைவர் தேவகவுடா 12 நிபந்தனைகளை விதித்துள்ளார். இது சம்பந்தமாக தேவ கவுடா பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், பாரதிய ஜனதா கட்சி- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியில் பா.ஜ.க வைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வராக பதவி வகிப்பார். துணை முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கூறும் நபரை நியமிக்க வேண்டும். எந்தெந்த அமைச்சர்களுக்கு எந்த இலாகா என்பதை முன்னாள் முதல்வர் குமாரசாமியுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
முந்தைய ஆட்சியில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இலாகாக்கள் ஒதுக்கப்பட வேண்டும். இரு கட்சியை சேர்ந்த எந்த அமைச்சரும், எந்த சட்ட மன்ற உறுப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் தனி்ப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது.
கூட்டணி கட்சியின் செயல்பாட்டை கண்காணிக்க குமாரசாமி தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும். இரு கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கூட்டணி கட்சிகள் பற்றி பகிரங்கமாக விமர்சனம் செய்யக் கூடாது.
அரசு நிர்வாகத்தில் நியமிக்கப்பட வேண்டிய அதிகாரிகள், அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தொடர்பாக குமாரசாமியுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
அமைச்சரவையில் எடுக்கும் முடிவுகள், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை தடுக்கும் வகையில் அமையக் கூடாது.
ஒப்பந்தங்கள் மீறப்பட்டாலோ அல்லது ஒருங்கிணைப்புக் குழுவில் விவாதித்து முடிவு எடுக்கப்படாமல் விட்டாலோ, கூட்டணி ஆட்சியில் இருந்து விலகிக் கொள்ள உரிமை உண்டு என்று கடிதத்தில் தேவகவுடா கூறியுள்ளார்.
தேவகவுடா விதித்துள்ள நிபந்தனைகளால் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிக்கு சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது.
தேவ கவுடாவின் கடிதத்தை பற்றி பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறுகையில், இது நிபந்தனைகள் அல்ல. அவரது எதிர்பார்ப்புகள் தான். எங்கள் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தால் அது எப்படி இருக்க வேண்டும் என்று தனது எதிர்பார்ப்புகளை ஜனதா தளம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. மக்களவைக்கு தேர்தல் வந்தால் இந்த கூட்டணி நீடிக்காது என்று கடித்தில் குறிப்பிட்டுள்ளார். இது சகஜம் தான். எங்கள் நிலைமையை தேர்தலின் போது நாங்கள் அறிவிப்போம் என்று ஜாவ்டேகர் கூறினார்.
இதிலிருந்து கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பது தான், இதன் முதன்மையான குறிக்கோளாக உள்ளது தெளிவாகிறது. எனவே தேவகவுடாவின் நிபந்தனைகளுக்கு தற்சமயம் பாரதிய ஜனதா கட்சி எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது என்று தெரிகிறது.