பிறப்பு இறப்பு பதிவாளர்கள் மாநாடு!
Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (19:49 IST)
பிறப்பு இறப்பு முதன்மைப் பதிவாளர்களின் இரண்டுநாள் மாநாடு புது டெல்லியில் இன்று தொடங்கியது.
இந்தியத் தலைமைப் பதிவாளர் டி.கே.சிக்ரி மாநாட்டைத் தொடங்கிவைத்தார். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த பதிவாளர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.
அவர் பேசுகையில், 2000-ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகைக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதைப் போல 2010-ஆம் ஆண்டிற்குள் நூற்றுக்கு நூறு விழுக்காடு பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்யமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
''தற்போது நம்மிடம் 2005-ஆம் ஆண்டுக் கணக்குதான் உள்ளது. அதன்படி தேசிய அளவில் 64 விழுக்காடு பிறப்புகளும், 58 விழுக்காடு இறப்புகளும் தான் பதிவு செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், பஞ்சாப், கேரளம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 100 விழுக்காடு பிறப்பை பதிவுசெய்துள்ளன.
பிறப்பு, இறப்பைப் பதிவு செய்வதில் உள்ள குறைபாட்டிற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுமக்களிடம் விழிப்புணர்வு குறைவாக உள்ளது.
பிறப்பு இறப்பைக் கணக்கில் கொண்டுதான் பல நல்ல திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று சிக்ரி தெரிவித்தார்.