விரைவில் தேசிய நில ஆணையம்: சோனியா காந்தி!
Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (15:40 IST)
ஏழை மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தேசிய நில ஆணையம் அமைப்பது குறித்தும், புதிய நிலச் சீர்திருத்தக் கொள்கையை உருவாக்குவது பற்றியும் ஐ.மு.கூட்டணி பரிசீலித்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
தலித்துகள், மலைவாழ் மக்கள், கிராம மக்கள் ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய நிலச் சீர்திருத்தக் கொள்கை உருவாக்கப்படும் என்று புது டெல்லியில் தன்னைச் சந்தித்த சமூகநல ஆர்வலர்களிடம் சோனியா காந்தி கூறியுள்ளார்.
மகசேசே விருதுபெற்ற அருணா ராய் தலைமையில் சமூகநல ஆர்வலர்கள் நேற்று சோனியா காந்தியைச் சந்தித்தனர்.
அப்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தனது தேசியக் குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டத்தில் கூறியுள்ளபடி நிலச் சீர்திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
''தங்களின் வாழ்க்கைக்காக நிலத்தை நம்பியிருக்கும் மக்களின் நில உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தேசிய நிலஆணையம் அமைக்க வேண்டும். அதைச் செயல்படுத்த தேசிய நிலச் சீர்திருத்தக் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும்.'' என்று அருணா ராய் தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட சோனியா காந்தி, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியவுடன் அவருடன் இதுபற்றிப் பேசுவதாக உறுதியளித்தார்.
முன்னதாக சமூகநல ஆர்வலர் குழுவினர் தங்களுடன் கொண்டு வந்திருந்த மாதிரி நிலக் கொள்கையைச் சோனியா காந்தியிடம் அளித்தனர்.
மேலும், நிலச் சீர்திருத்தத்தை வலியுறுத்தி பிரச்சாரப் பயணம் ஒன்று புறப்பட்டது. துவக்க நிகழ்ச்சியில் 25,000 க்கும் மேற்பட்ட பழங்குடியினரும், உழவர்களும் கலந்து கொண்டனர்.
குவாலியரில் நேற்றுப் புறப்பட்ட இப்பயணம் நாடு முழுவதும் சென்றுவிட்டு மீண்டும் 29-ஆம் தேதி டெல்லியை அடையும்.