அணு சக்தி ஒப்பந்தம் : பின்வாங்கப் போவதில்லை - காங்கிரஸ்!

Webdunia

திங்கள், 15 அக்டோபர் 2007 (20:43 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது என்கின்ற அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது!

ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்துவரும் இடதுசாரி கட்சிகள், அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அதனைக் கிடப்பில் போடுவது என்று அரசு முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் ஷக்கில் அகமது இவ்வாறு பதில் கூறியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு நடத்திய மாநாட்டில் பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பேசியதன் அடிப்படையில் அணு சக்தி ஒப்பந்தத்தை கிடப்பில் போடுவது என்று காங்கிரஸ் கட்சியும், பிரதமரும் முடிவு செய்திருப்பதாக பரவலாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஷக்கில் அகமதுவிடம், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகளின் சந்தேகங்களை போக்கும் முயற்சியில்தான் அரசு ஈடுபட்டுள்ளதே தவிர, அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று பதிலளித்தார்.

"இப்பிரச்சனையில் பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தங்களுடைய நிலைகளை தெளிவுபடுத்தியுள்ளனர். அதில் எந்த அடித்தலும் இல்லை, திருத்தலும் இல்லை" என்று ஷக்கில் அகமது கூறினார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் பிரதமர் விளக்குவாரா என்று கேட்டதற்கு, இப்பிரச்சனை நமது நாட்டிற்கு உட்பட்டது. அதில் உலகத் தலைவர் எவருக்கும் எதையும் விளக்குவதற்கு ஒன்றுமில்லை என்று பதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்