இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்லும் : பிரதமர்!

Webdunia

திங்கள், 15 அக்டோபர் 2007 (15:57 IST)
இந்திய தொடர்ந்து 9 முதல் 10 விழுக்காடு வரை வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங் நைஜிரியாவிற்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் ஐந்து நாள் அரசுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நைஜிரியாவிற்கு வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை கவுரவிக்கும் வகையில் நேற்று இரவு அங்குள்ள இந்திய சமுதாயத்தினர் விருந்தளித்தனர்.

அவர்கள் மத்தியில் உரையாற்றும் போது மன்மோகன் சிங், இந்தியா தொடர்ந்து ஒன்பது முதல் பத்து விழுக்காடு வரை வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கையுள்ளது. இதனால் வெளிநாடுகளில் வாழும் இந்திய சமுதாயத்தினர், இந்தியாவின் வளர்ச்சியில் பங்கு கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியா பெரிய மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதுடன், மிகுந்த தன்னம்பிக்கை உள்ள தேசமாகும். உங்கள் அனைவரையும் உங்கள் தாய்நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

இந்தியாவுக்கும் நைஜிரியாவிற்கும் பல பொதுவான அம்சங்கள் ஒரே மாதியாக இருக்கின்றன. இரு நாடுகளுக்கும் உள்ள வரலாற்று பூர்வமான அனுபவம் மற்றும் வளர்ச்சி அடைவதில் சந்திக்க வேண்டிய சவால்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இவை இரு நாடுகளையும் அருகாமையில் கொண்டு வருகின்றது.

நாங்கள் பொதுவான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளோம். உலகத்தில் இந்தியா மாபெரும் ஜனநாயக நாடு. அதே போல் ஆப்பிரிக்க கண்டத்தில் நைஜிரியா மாபெரும் ஜனநாயக நாடு. இரு நாடுகளிலும் பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், பல மொழிகள் உள்ளன. இரு நாடுகளிலும் பல கட்சி பங்கு கொள்ளும் ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இந்தியாவுக்கு நைஜிரியாவுடனும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளுடனுமான உள்ள உறவு மிக முக்கியமானது. நாங்கள் இப்போது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே உள்ள நல்லுறவை பல்வேறு தளங்களில் இருதரப்பிற்கும் பயன்கள் கிடைப்பதற்கு தகுந்தாற்போல் பலப்படுத்த வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்