பஞ்சாப் மாநிலத்தின் வணிக நகரமான லூதியானாவில் உள்ள சம்ராலா சாலையில் ஒரே கட்டடத்தில் சிங்கார், மினி சிங்கார், மிதி சிங்கார் என்ற 3 திரையரங்குகள் உள்ளன.
இதில் சிங்கார் திரையரங்கில் `ஜனம் ஜனம் கே சாத்' என்ற போஜ்புரி மொழி திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளது. நேற்று மாலைக் காட்சி ஓடிக் கொண்டு இருந்தது.
வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்காக இடம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் பலர் இத்திரைப்படத்திற்கு வந்திருந்தனர். திரையரங்கில் சுமார் 600 பேர் இருந்தனர்.
காட்சி முடிவதற்கு சிறிது நேரத்திற்கு முன் 8-45 மணி அளவில், இருக்கை ஒன்றின் அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதிர்ச்சியில் ஜன்னல்கள் நொறுங்கின. இருக்கைகள் தூக்கி எறியப்பட்டன.
இந்த குண்டு வெடிப்பில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் அவ்விடத்திலேயே இறந்தனர். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனைஉள்ளிட்ட அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே 3 பேர் இறந்தனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் சாவு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுவதாக காவல்துறை டி.ஐ.ஜி ஈஸ்வர் சிங் தெரிவித்தார்.
இந்நிகழ்வு குறித்துத் தகவல் கிடைத்ததும் காவல்துறை அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் திரையரங்கிற்கு விரைந்து வந்தனர்.
மத்திய உள்துறை செயலாளர் மதுகர் குப்தா பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவரைத் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கேட்டு அறிந்தார்.
இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.