மத்தியில் காங்கிரஸ் தலைமையிலுள்ள முற்போக்கு கூட்டணி அரசு கோதுமைக்கு சமமாக நெல்லுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.1,000 அறிவிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
விஜயவாடாவில் ஆந்திர மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பன்டாரு தத்ரேயா செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையாக சன்னரக நெல் குவின்டாலுக்கு ரூ.675 ஆகவும், மற்ற ரக நெல் குவின்டாலுக்கு ரூ.645 என அறிவித்துள்ளது. இத்துடன் போனசாக குவின்டாலுக்கு ரூ.50 அறிவித்துள்ளது.
மத்திய அரசு கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி இருப்பது, மக்களவைக்கு பொதுத் தேர்தல் வரலாம் என்ற நோக்கத்தில் வாக்குகளை வாங்குவதற்காகதான்.
மக்களவைக்கு தோ்தல் வநதால் தென் மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி பல இடங்களை இழக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நன்கு தெரியும். அதனால் தான் தென் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கையான நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை அதிகரிக்க வேண்டும் என்பதை நிறைவேற்றுவதில், பிரதமர் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று தத்ரேயா குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியும், மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை அதிகரிக்க மத்திய அரசை வலியுறுத்த தவறி விட்டனர்.
ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி, இது விஷயமாக உடனடியாக பிரதமரை சந்தித்து பேசி, விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். அத்துடன் தென் மாநிலங்களின் மாநில முதல்வர்களுடன், ராஜசேகர ரெட்டி உடனடியாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து கரும்பு மற்றும் மஞ்சளுக்கு கட்டுபடியாக கூடிய விலையை நிர்ணயி்க்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்.
மத்திய அரசு நேற்று வருகின்ற ரபி பருவத்திற்கு கோதுமைக்கு சென்ற வருடம் இருந்த குறைந்த பட்ச ஆதார விலையான ரூ. 850 ஐ உயர்த்தி, இதுவரை இல்லாத அளவிற்கு குவின்டாலுக்கு ரூ. 1, 000 என அறிவித்துள்ளது. குவின்டால் ரூ 1,600 என்ற விலையில் கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது என்ற விமர்சனம் எழுந்ததால், கோதுமைக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று தத்ரேயா கூறினார்.