தேர்தலைத் திணிக்கிறது காங்கிரஸ் : இடதுசாரிகள் குற்றச்சாற்று!
Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (12:49 IST)
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ள குற்றச்சாற்றுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இடதுசாரிக் கட்சிகள், மக்களின் மீது தேர்தலைத் திணிக்கிறது காங்கிரஸ் என்றுகுற்றம் சாற்றியுள்ளன!
ஹரியானாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரசு தலைவர் சோனியா காந்தி, அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் சக்திகள் காங்கிரசுக் கட்சிக்கு மட்டும் எதிரிகள் அல்ல, இந்த நாட்டின் வளர்ச்சிக்கும்தான் என்று கூறியிருந்தார்.
இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இடதுசாரிகள், "இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பது என்பது நாட்டின் நலன்கருதி கொள்கை ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு, அதில் சமரசம் செய்துகொள்ள முடியாது" என்று கூறியுள்ளனர்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், "காங்கிரசு தேர்தல் தயாரிப்பை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. நாட்டில் தேர்தல் வரவேண்டும் என்று காங்கிரசு விரும்புகிறது. அரசு கவிழ்ந்து நாட்டில் தேர்தல் வந்தால் அதற்குக் காங்கிரசுதான் பொறுப்பாக இருக்க முடியும்" என்றார்.
"கூட்டுக்குழுக் கூட்டத்தில் தங்கள் நிலையை இடதுசாரிகள் தெளிவாகக் கூறிவிட்டனர். நாங்கள் அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று நாங்கள் எப்போதும் கூறியதில்லை. உங்களை நாங்கள் இறக்கிடுவோம் என்றும் கூறியதில்லை" என்றும் ஏ.பி.பரதன் கூறினார்.
சோனியா காந்தியின் விமர்சனம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், "இது மக்களின் மீது தேர்தலைத் திணிப்பது போல இருக்கிறது. நாட்டில் மற்றொரு தேர்தல் வர இடதுசாரிகள் கருவியாக இருக்க முடியாது. நாட்டின் நலன் கருதித்தான் அணுசக்தி ஒப்பந்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்" என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உடனடியாகக் கருத்துக் கூற மறுத்துவிட்டார்.