இராமரைப் பற்றிப் பொதுமேடையில் விவாதம் : கருணாநிதிக்கு வேதாந்தி சவால்!
Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (18:20 IST)
விஸ்வ இந்து பரிஷத் தலைவரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான ராம்விலாஸ் வேதாந்தி, இராமரைப் பற்றிப் பொதுமேடையில் விவாதிக்க வருமாறு தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
லக்னோவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராம்விலாஸ் வேதாந்தி, ''யாராவது உங்கள் கடவுளைத் தூற்றினால் அவருடைய நாக்குத் துண்டிக்கப்பட வேண்டும் என்று பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படிதான் நான் கருணாநிதிக்கு எதிராக மதக் கட்டளை பிறப்பித்தேன்'' என்று கூறியுள்ளார்.
இராமரைப் பற்றிக் கூறியுள்ள கருத்துகளுக்காக தமிழக முதல்வர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய வேதாந்தி, அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்குள் இந்த விவகாரம் தீர்க்கப்படவில்லை என்றால் உலகளாவிய இயக்கமொன்றை இந்துக்கள் நடத்துவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், இராமரைப் பற்றி எங்கு வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார்.
சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியைக் கைப்பற்றுவதற்காக, நாட்டின் பெரும்பான்மை மக்களான இந்துக்களுடன் மோத காங்கிரசும், திமுகவும் தயாராகிவிட்டன என்றும் வேதாந்தி குற்றம்சாற்றினார்.
''இராமர் பாலத்திற்காக என் உயிரையும் தருவேன். இராமன் மதுவிற்கு அடிமையானவன் என்று தமிழக முதல்வர் கூறியிருப்பது இந்துக்களின் உணர்வுகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அவமானம்... வால்மீகி இராமயணத்திலேயே இராமன் ஒரு உண்மையான துறவி என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அவர் காட்டிலிருந்தபோது தனது உணவாக பழங்களை மட்டுமே சாப்பிட்டார்'' என்று வேதாந்தி கூறினார்.