சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று காலையில் புதுச்சேரியிலும் தி.மு.க தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரம் இருந்தனர்.
புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன் தலைமையில், பா.ம.க., கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்., தி.க., இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
இந்த உண்ணாவிரதத்தில் புதுவையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை.
மறைமலை அடிகளார் சாலையில் வெங்கடசுப்பராய ரெட்டியார் திருவுருவச் சிலை அருகே நடந்த இந்த உண்ணாவிரதத்தில் ஜ.மு.கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புதுச்சேரிக்கும் மற்ற அண்டை மாநிலங்களுக்கும் இடையே பேருந்து போக்குவரத்து நடைபெறவில்லை. புதுவை மாநில அரசு சார்பில் இயக்கப்படும் நகர பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் இயங்கின. அரசு அலுவலகங்களில் குறைந்த அளவு ஊழியர்களே பணிக்கு வந்திருந்தனர். எப்போதும் நோயாளிகளின் நெரிசல் மிகுந்து காணப்படும் ஜிப்மர் மருத்துவமனையிலும், அரசு பொது மருத்துவமனையிலும் சில நோயாளிகளே சிகிச்சைக்காக வந்திருந்தனர்.
சேது சமுத்திர திட்டத்தை விரைவில் நிறைவேற்றக் கோரி, இன்று நடத்தவிருந்த முழு வேலை நிறுத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் உண்ணாவிரதம் இருக்க, தி.மு.க தலையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் முடிவு எடுத்தனர்.