அணுசக்தி ஒப்பந்தம் செயல்படுத்தப்படும்-கபில்சிபல்

Webdunia

ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 (11:35 IST)
இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சர் கபில்சிபல் நேற்று பெங்கால் தேசிய வர்த்தக மற்றும் தொழிற்சங்க கூட்டத்தில் பேசினார்.

அப்போது, 2022-ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த எரிசக்தி தேவை 4 லட்சத்து 48 ஆயிரம் மெகாவாட்டை எட்டும். அதில் அணுசக்தி மூலம் கிடைக்கும் எரிசக்தி 33 ஆயிரம் மெகாவாட்டாக இருக்கும். இது 2032-ம் ஆண்டில் 63 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரிக்கும். எனவே நாம் அணுசக்தி வளங்களை அதிகரிக்க வேண்டியது அவசர தேவையாகும் என்றார்.

அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அணுசக்தி வழங்கலை உறுதி செய்யும். நாட்டின் வளர்ச்சிக்கு இது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த விஷயத்தில் மத்திய அரசு சமரசம் செய்து கொள்ளாது. இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

சிவில் அணுசக்தி ஒப்பந்தம் மூலம், நாம் எந்தவொரு நாட்டிடமும் இருந்து அணு உலைகளை பெற முடியும். அணுசக்தி திட்டங்களையும் தொடரலாம். எனவே இந்த ஒப்பந்தத்தை அனைத்து தரப்பினரும் வரவேற்க வேண்டும். அணுசக்தி ஒப்பந்தத்தால் நமது இறையாண்மைக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது. பதிலாக நாடு ஒட்டுமொத்த வளர்ச்சி அடைய வழிவகுக்கும் என்று கூறினார் கபில் சிபல்.

வெப்துனியாவைப் படிக்கவும்