ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா, கோதாவரி நதிகள் அரபிக் கடலில் கலக்கும் முகத்துவாரத்தின் அருகே அமைக்கப்படுள்ள எண்ணெய் துரப்பணக் கிணற்றில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக கேரின் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
அரபிக் கடலில் நிலத்துக்கு அடியில் பெருமளவு பெட்ரோலிய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பல நிறுவனங்கள் துரப்பண எண்ணெய் கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெயை எடுக்கின்றன.
இங்கு ராவா பகுதியில் தோண்டிய துரப்பண கிணற்றில் கச்சா எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தொடக்கத்தில் தினசரி 1,500 பீப்பாய் எடுக்க முடியும் எனறு, இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்தார். இது பற்றி இது வரை ஹைட்ரோ கார்பன் இயக்குநரகத்திற்கு அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட வில்லை என்று தெரிகிறது.
இந்த துரப்பண எண்ணெய் கிணற்றில் இருந்து, இந்த நிதியாண்டின் இறுதி ஆறு மாதத்தில் 60,878 பீப்பாய் எண்ணெய் எடுக்க முடியும் என்று கேரின் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த பகுதியில் கேரின் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து, கச்சா எண்ணெய் இருப்பதை கண்டுபிடிப்பதற்காக, துரப்பண கிணறுகளை அமைத்து வருகிறது.
இந்த எண்ணெய் கிணற்றில் 22.5 விழுக்காடும் கேரின் வசமும், ஒ.என்,ஜி.சி நிறுவனத்திற்கு 40 விழுக்காடுகளும், வீடியோகான் நிறுவனத்திற்கு 25 விழுக்காடுகளும், ராவா ஆயில் நிறுவனத்திற்கு 12.5 விழுக்காடுகளும் உரிமை உள்ளது.
இந்த பகுதியில் ரிலையன்ஸ் ஆயில் நிறுவனம் தோண்டியுள்ள கிணற்றில் இருந்து இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை எரிவாயுவை விற்பனை செய்யும் ரிலையன்ஸ் ஆயில் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.