இந்தியா-சீனா எல்லைப் பேச்சில் முன்னேற்றம்!
Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (18:54 IST)
இந்தியா - சீனா இடையில் உள்ள எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் பீஜிங்கில் இன்று நடைபெற்ற பேச்சில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
"இந்திய - சீன எல்லைகளை முடிவு செய்வது தொடர்பாக இந்தியாவின் தேசியப் பாதுகாப்புச் செயலாளர் எம்.கே. நாராயணன், சீனாவின் துணை அயலுறவுத் துறை அமைச்சர் டாய் பிங்கோ ஆகியோருக்கு இடையில் பயனுள்ள முன்னேற்றமளிக்கும் பேச்சுக்கள் நடைபெற்றன" என்று சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது, "வெளிப்படையான, நட்புரீதியான, ஒத்துழைப்பு அளிக்கும் விதமான சூழலில் பேச்சு நடைபெற்றது" என்று கருத்து கூறப்பட்டது.
எம்.கே. நாராயணன் விரைவில் இந்தியா திரும்பியவுடன் பேச்சின் விவரங்களை விரிவாகத் தெரிவிப்பார். இந்தப் பேச்சு இருதரப்பு உறவுகளிலும் மென்மையான அணுகுமுறையை வலுப்படுத்த உதவியாக இருக்க வேண்டிய தேவையைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளதென கருதப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் பிரதமர் மன்மோகன்சிங் பீஜிங் செல்லத் திட்டமிட்டுள்ளார். அதையடுத்து இருதரப்புச் சிறப்புப் பிரதிநிதிகளிடையிலான அடுத்தகட்டப் பேச்சை பீஜிங்கில் நடத்த இந்தியாவும், சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன என்றும் அந்தச் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.