இரயில்களில் ஏடிஎம் இயத்திரங்கள் அறிமுகம்
Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (14:34 IST)
பயணிகளுக்குப் பல்வேறு புதிய நவீன வசதிகளை இந்தியன் இரயில்வே வழங்கி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஓடும் இரயில்களில் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.
இரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் வழியில் ஏற்படும் திடீர் செலவுகளுக்குப் பணம் எடுத்துக் கொள்ளும் வகையில் ஓடும் இரயிலில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களை அமைப்பதுபற்றி இரயில்வே அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய இரயில் நிலையங்களில் மட்டுமே ஏடிஎம் இயந்திரங்கள் உளளன. நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையஙகளில் 1833 புதிய ஏடிஎம் இயந்திரங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏடிஎம் இயந்திரங்களில் மின்னணுப் பயணச் சீட்டுக்களையும் (இ டிக்கெட்) பெறமுடியும்.
இரயில்களில் அமைக்கப்படும் மிகப்பெரிய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களை இரயில்வே நிருவாகமே பராமரிக்கும். தனிப்பட்ட சிறப்புப் பெட்டிகளில் இருக்கும் ஏடிஎம் இயந்திரங்களில் பயணிகள் பாதுகாப்பாகப் பணம் எடுக்கும் வகையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் ( RDSO ) துறையின் சிறப்பான திட்டம்தான் இது, என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
"பயணத்தின் போது பணப்பரிமாற்றம் செய்யவேண்டும் என்ற மக்களின் நீண்டகாலக் கனவை நிறைவேற்றும் முயற்சியாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் தகவல் தொடர்பு முறை (GSM) மற்றும் GPS ஆகியவை மூலம் இது சாத்தியம்" என்றும் அவை கூறியுள்ளன.
தற்போது கான்பூர் ஐஐடியில் இயங்கிவரும் RDSO, இரயில்களின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ளவும் அவற்றைப் பின் தொடரவும் உதவக்கூடிய சிம்ரான் (SIMRAN) என்ற மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இரயில்களின் வேகம், அவை இருக்கும் சரியான இடம், செல்லும் திசை ஆகியவற்றைக் கண்டறிய சிம்ரான் மென்பொருள் உதவும். இதனால் இரயில் மோதல் போன்ற விபத்துக்களைத் தடுக்க முடியும்.