அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு உதவ மாட்டோம் : காரத்!

Webdunia

வியாழன், 13 செப்டம்பர் 2007 (16:54 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு எந்தவிதத்திலும் இடதுசாரிகள் உதவமாட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்!

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தால் இந்தியாவின் ஜனநாயகத்தின் மீதும், இறையாண்மையின் மீதும் ஏற்படும் தாக்கங்கள் என்ற தலைப்பில் உரையாற்றிய பிரகாஷ் காரத், "அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை கைவிடுங்கள் என்று நாங்கள் கூறவில்லை. அது தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றுதான் கூறுகிறோம். எந்தவிதத்திலும் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு நாங்கள் உதவமாட்டோம்" என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலர் தேவபிரதாப் பிஷ்வாஸ், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக உருவாகியுள்ள சந்தேகங்களை போக்கிவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கையில் அரசு ஈடுபடவேண்டும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்