அணு சக்தி ஒப்பந்தம் : நாடாளுமன்ற அவைகள் தள்ளிவைப்பு!

Webdunia

திங்கள், 10 செப்டம்பர் 2007 (14:38 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து ஆராய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று கோரி பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்படுதிய அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகள் மாலை 4 மணிக்கு தள்ளிவக்கப்பட்டுள்ளது!

இன்று காலை அவை கூடியதும் கேள்வி நேரத்தை தள்ளிவைத்துவிட்டு, நாடாளுமன்றக் கூட்டு குழு அமைக்க வேண்டும் என்று விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து முழக்கமிட்டதால் 5 நிமிடத்திலேயே அவை நடவடிக்கைகள் ஒரு மணி நேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

பிறகு அவை மீண்டும் கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து முழக்கமிட்டவாறு இருந்தனர்.

இந்த நிலையில், விமானங்கள் திருத்தச் சட்ட முன்வரைவு 2006 குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, அவை நடவடிக்கைகள் மாலை 4 மணி தள்ளிவைப்பதாகவும், அப்பொழுது இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும் என்றம் அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.

இதேபோல, மாநிலங்களவையிலும் பா.ஜ.க.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவை நடவடிக்கைகளைத் தடுத்ததால் மாலை 4 மணி வரை தள்ளிவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்